வாட்ஸ்அப்பில் Facebook போன்ற புதிய வசதி! ஆன்லைனில் இருப்பவர்கள், பிறந்தநாள் இனி ஒரே இடத்தில்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக்கில் இருப்பதைப் போன்ற சில அம்சங்களுடன், வாட்ஸ்அப்பில் தனியாக காண்டாக்ட்ஸ் (Contacts) டேப் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவருடன் உரையாட வேண்டுமென்றால், அவருடைய பெயரைத் தேட வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள சாட் பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். புதிய காண்டாக்ட்ஸ் டேப் அறிமுகமானால், வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதுடன், அவர்களை எளிதாகத் தேடவும் முடியும்.
ஆன்லைனில் இருப்பவர்கள் யார்?
இந்தப் புதிய வசதியில், தற்போது ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளி காட்டப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.
மேலும், தொடர்புகளை அவர்களின் பெயர், தொலைபேசி எண் அல்லது பயனர்பெயர் மூலம் தேடும் வசதியும் இடம்பெறலாம். ஆன்லைனில் இருப்பவர்களை முதலில் காண்பது அல்லது பெயர் வரிசைப்படி தொடர்புகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வசதிகளும் பரிசீலனையில் உள்ளன.
நண்பர்களின் பிறந்தநாளையும் நினைவூட்டும்!
இந்த அப்டேட்டில் இடம்பெறக்கூடிய மற்றொரு முக்கிய அம்சம் பிறந்தநாள் நினைவூட்டல். மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகளின் பிறந்தநாள் விவரங்கள் கிடைக்கும் நிலையில், குறிப்பிட்ட நபருக்குப் பிறந்தநாள் என்றால் கேக் எமோஜியுடன் அறிவிப்பு காட்டப்படும் எனக் கூறப்படுகிறது.இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்துகளைப் பகிர்வது எளிதாகும்.
எப்போது அறிமுகமாகும்?
இந்த புதிய காண்டாக்ட்ஸ் டேப் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
எனவே, புதிய வசதிகள் உடனடியாக அனைவருக்கும் கிடைக்கும் என்று கருத முடியாது. வாட்ஸ்அப்பின் அடுத்தடுத்த அப்டேட்களில் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
