இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் சேவை முடக்கம் - மீடியா கோப்புகளை அனுப்ப முடியாமல் பயனர்கள் அவதி!
பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட மீடியா கோப்புகளை அனுப்புவதில் உலகளவில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சாதாரண உரைச் செய்திகள் வழக்கம்போல் சென்றாலும், புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் மற்றும் ஸ்டிக்கர்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தச் சேவைப் பாதிப்பு பரவலாகப் பதிவாகியுள்ளது.

சேவை முடக்கத்தைக் கண்காணிக்கும் 'டவுன்டெக்டர்' தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் இயங்கவில்லை எனப் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.
போன் ரீஸ்டார்ட் செய்தல், வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றிப் பார்த்தல் போன்ற எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனப் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சேவைப் பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து மேட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
