இனி இது இல்லாமல் வாட்ஸ்அப் இயங்காது - மத்திய அரசின் அடுத்த அதிரடி!

 
வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி மொபைல் போனில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் இயங்கும் வகையில் புதிய மாற்றங்கள் வரவுள்ளன. தற்போதுள்ள நடைமுறைப்படி, ஒருமுறை வாட்ஸ்அப் கணக்கை தொடங்கிவிட்டால், அதன் பிறகு சிம் கார்டை கழற்றிவிட்டாலோ அல்லது அந்த சிம் செயலிழந்து போனாலோ கூட வைஃபை வசதியைப் பயன்படுத்தி தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடிகிறது. இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்திப் பல முறைகேடுகள் நடப்பதாக அரசு கருதுகிறது.

வாட்ஸ் அப்

புதிய விதிகளின் சிறப்பம்சங்கள்:

கட்டாய சிம் சரிபார்ப்பு: செல்போனில் செயலில் உள்ள சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்த முடியும். சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ அந்தச் செயலிகள் தானாகவே முடங்கிவிடும்.

போலி கணக்குகள் மற்றும் சிம் கார்டு இல்லாமல் சமூக வலைதளங்களை இயக்குவதன் மூலம் நடக்கும் குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் 'சிம் அடிப்படையிலான சரிபார்ப்பு' பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான சோதனை ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப்

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், நீண்ட நாட்களாக ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் அல்லது சிம் கார்டு இல்லாமல் வைஃபை மூலம் மட்டும் இயங்கும் வாட்ஸ்அப் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உங்களது வாட்ஸ்அப் கணக்கு தொடர்ந்து இயங்க வேண்டுமெனில், அந்த எண்ணைக் கொண்ட சிம் கார்டு மொபைலில் இருப்பதையும், அது செயல்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.