விளையாடியபோது விபரீதம்... கார் கதவைத் திறக்க முடியாமல் 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் கிராமத்தில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் சஞ்சீவி பரிதாபமாக உயிரிழந்தான். தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாகப் பக்கத்து வீட்டு வாசலில் நின்றிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளான். அப்போது தானாகப் பூட்டிக்கொண்ட காரின் கதவைத் திறக்க முடியாமல், நீண்ட நேரம் காருக்குள்ளேயே சிறுவன் சிக்கிக் கொண்டான்.

வெகுநேரமாகியும் சிறுவனைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மதிய வேளையில் வீட்டின் அருகே போர்த்தி வைக்கப்பட்டிருந்த காரின் கவரை நீக்கிப் பார்த்த போது, சிறுவன் மயக்க நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனை குளித்தலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த தோகைமலை போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விளையாடச் சென்ற குழந்தை காருக்குள் சிக்கி உயிரிழந்த இந்தச் சோகச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை வெயிலில் கார் கதவு பூட்டிக்கொண்டதால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடே சிறுவனின் உயிரிழப்பிற்குக் காரணம் எனத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
