குரங்குகளை விரட்ட முயன்றபோது விபரீதம்.. மின்சாரக் கம்பியில் உரசியதில் இளைஞர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கஜுராஹோ அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த இளைஞர், குரங்குகளை விரட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கஜுராஹோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ரானு ரைக்வார் என்ற 22 வயது இளைஞர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். இன்று விடுதி வளாகத்திற்குள் புகுந்த குரங்குகள் அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதோடு, மேற்கூரையின் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளன.

குரங்குகளை விரட்டுவதற்காக ரானு ஒரு நீண்ட இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு மேற்கூரைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கம்பியை அசைத்து குரங்குகளை விரட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பி மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பி மீது உரசியது.

மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ரானு, பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து வந்த கஜுராஹோ போலீசார், ரானுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, ஒரு சிறிய கவனக்குறைவால் இளைஞர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
