கேட் 2027 தேர்வு எப்போது? சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தேசிய அளவில் நடத்தப்படும் 'கேட் 2027' நுழைவுத் தேர்வை நடத்தும் முதன்மை ஒருங்கிணைப்பு கல்வி நிறுவனமாகச் சென்னை ஐ.ஐ.டி அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம் மற்றும் மானுடவியல் போன்ற இளங்கலை பாடப் பிரிவுகளுக்கான இந்தத் தேசியத் தேர்வின் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
கணினி அடிப்படையில் நடத்தப்படும் 'கேட் 2027' தேர்வுக்கான அட்டவணை மற்றும் புதிய மாற்றங்கள்: 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். அதிகரித்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இம்முறை 'ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்' என்ற புதிய பாடப் பிரிவு சேர்க்கப்பட்டு, மொத்தம் 30 தேர்வுத் தாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜவுளி பொறியியல் மற்றும் பைபர் அறிவியல் பாடத்தாள், இனி 'என்ஜினீயரிங் அறிவியல்' பிரிவின் கீழ் துணைத் தாளாக மாற்றப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
தேர்வை முறைகேடுகளின்றி நியாயமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தும் நோக்கில், இம்முறை விண்ணப்பப் பதிவின் போதே டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் முகப்பதிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே, தேர்வுக்கூடங்களுக்குள் தடையின்றி நுழைவதற்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிவு அம்சங்களைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரர்களுக்குச் சென்னை ஐ.ஐ.டி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைக்குத் தேர்வாளர்கள் https://gate2027.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
