இலவச சமையல் கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான "அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து வரும் நிலையில், தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் அண்மையில் வெளியிட்ட அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ. 13.18 லட்சம் கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாடு சந்தித்து வரும் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி மற்றும் ஆண்டுக்கு ரூ. 67,000 கோடி வட்டி செலுத்தும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், இலவச சிலிண்டர் உள்ளிட்ட பெரிய அளவிலான நிதி தேவைப்படும் திட்டங்களை உடனே அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

ஒவ்வொரு தகுதியுள்ள குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவசமாக வழங்க, ஒரு குடும்பத்திற்குச் சுமார் ரூ. 6,000 வரை அரசுக்குச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தக் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஆண்டுக்குச் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.
மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவது, அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற தவெக-வின் பிற முக்கிய வாக்குறுதிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தவெக அரசு ஏற்கனவே முதற்கட்டமாக, விவசாயிகளுக்கான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளுடன் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த இலவச சமையல் கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகள் தகுதிப் பட்டியல் மற்றும் இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் அரசிடமிருந்து வெளியாகவில்லை. தற்போதைய கடுமையான நிதி நெருக்கடியைச் சீரமைத்த பிறகு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலோ அல்லது நிதியாண்டின் அடுத்தடுத்த கட்டங்களிலோ இத்திட்டத்தை அரசு படிப்படியாகவோ அல்லது குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையிலோ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
