தமிழ்நாடு காவலர் தேர்வில் 3,597 பேருக்கு தற்காலிகத் தேர்வு - பட்டியலை எங்கே, எப்படி பார்ப்பது?!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், 3,597 பேர் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய மூன்று துறைகளில் மொத்தம் 3,665 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 21.08.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சிறப்புத் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள் 68 பேர் ஏற்கெனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,597 பேரின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை மற்றும் முன்வரலாறும் சரிபார்க்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
தேர்வர்கள் தங்களது பெயர் அல்லது பதிவு எண்ணை அறிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று தேர்வுப் பட்டியலைப் பார்க்கலாம்.
