தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
உள் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
