வெள்ளை மாளிகை அருகே அடுத்தடுத்து பாதுகாப்பு மீறல்கள்… 30 நிமிடங்கள் முடக்கப்பட்ட அதிபர் மாளிகை!

 
வெள்ளை மாளிகை

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தபோது, அதன் அருகே அடுத்தடுத்து இரண்டு பாதுகாப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால், அதிபர் மாளிகை சிறிது நேரம் முடக்கப்பட்டது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே லபாயெட் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று (நவம்பர் 9) காலை சுமார் 10 மணியளவில், கார் ஒன்று நடைபாதையில் ஏறி அங்கிருந்த தகவல் பலகை மீது மோதியது. காரில் இருந்து புகை வெளியேறிய நிலையில், பாதுகாப்புப் படையினர் ஓட்டுநரை வெளியே வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் ஒத்துழைக்காமல் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில், பூங்காவின் மற்றொரு பகுதியில் மர்ம நபர் ஒருவர் பாதுகாப்புத் தடுப்பைத் தாண்டிக் குதித்தார். அவரையும் ரகசியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

 White House briefly locked down after car crashes near complex, two arrested

இரு சம்பவங்களையும் தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக முடக்கப்பட்டது. அருகிலிருந்த சாலைகளும் மூடப்பட்டன. காரில் வெடிகுண்டு அல்லது ஆபத்தான பொருட்கள் உள்ளனவா என போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகவில்லை. அவை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்