வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்... வேகமெடுக்கும் தவெக அரசு!
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அதிகாரப்பூர்வச் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை முதல் வாரத்தில் கூட்டப்பட உள்ளதாகத் தற்போது அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் கொள்கைகள் மற்றும் நிதிநிலை குறித்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறவுள்ளதால், இக்கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இதில் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.
ஆளுநர் உரை:
ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இக்கூட்டத்தொடரின் முதல் நாளில், தமிழக ஆளுநரின் உரையுடன் கூட்டத்தொடர் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். இதில் புதிய அரசின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான கொள்கை வரைவுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும்.

பட்ஜெட் தாக்கல்:
அதனைத் தொடர்ந்து, புதிய தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முழுமையான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் நா. மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார்.
மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை:
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, தமிழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்தக் கடன் சுமை மற்றும் நிதி நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் முக்கிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுக்கவுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், "மாநிலத்தின் உண்மையான நிதிப் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மை நிலவரங்களை விளக்கும் வகையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் (ஜூன் பாதியில்) அதிகாரப்பூர்வ 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆட்சி முறையினால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளைத் தெளிவுபடுத்திய பின்னரே, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைச் சுமுகமாகத் திட்டமிட முடியும் என தவெக அரசு கருதுகிறது.
புதிய பட்ஜெட் மற்றும் வெள்ளை அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால், தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக சீரமைப்பு உள்ளிட்ட தவெக-வின் முதன்மை வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் எவ்வாறு கையாளப்படவுள்ளன என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.
