"பேட்ச் வொர்க் ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியாகும்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!
சட்டமன்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை மாநகராட்சிச் சாலைப் பராமரிப்புப் பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதுடன், பேட்ச் வொர்க் பணிகளில் நடந்த ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகள் குறித்து அதிக புகார்கள் வந்ததால், அவற்றின் பராமரிப்புப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் தொழிற்தட விரைவுச் சாலை உருவாக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி 8 வழிச் சாலை, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை மற்றும் வியாசர்பாடி ரயில்வே மேம்பால நீட்டிப்பு ஆகியவை விரைவுபடுத்தப்படும்.

சென்ட்ரல், கத்திப்பாரா மற்றும் கோயம்பேடு ஆகிய முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பில் முக்கோண வழித்தடச் சாலை அமைக்கப்படும்.
கேரள மாநிலத்தைப் போலத் தமிழகத்திலும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை விதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், வில்லிவாக்கம் மற்றும் கரூர், கடலூர், குமரி மாவட்டங்களில் புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும். நேரு உள் விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடி, வெள்ளிக்கு ரூ.3 கோடி, வெண்கலத்திற்கு ரூ.2 கோடி என ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குப் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
