குழந்தைகளுக்கு எடை குறைப்பு மருந்துகள், அறுவை சிகிச்சை வேண்டாம் - உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்!

 
who

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்த, 9 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு எடை குறைப்பு மருந்துகள் மற்றும் உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சைகளைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

who

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள், துரித உணவுகள், அதிக கலோரி உள்ள உணவுகளை உட்கொள்வது மற்றும் உடல் செயல்பாடுகள் குறைவது ஆகியவை குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. விளையாடும் நேரம் குறைந்து, செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதும் கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே, குழந்தைகளின் உணவுப் பழக்கத்தைச் சீரமைப்பதுடன், அவர்களைத் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

who

அதேநேரத்தில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட உடல் பருமன் கொண்ட இளம் பருவத்தினருக்கு, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில், மருத்துவர்களின் மேற்பார்வையில் சில எடை குறைப்பு மருந்துகளைப் பரிசீலிக்கலாம். கடுமையான உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட மருத்துவ நிபந்தனைகளின் கீழ் அறுவை சிகிச்சையும் பரிசீலிக்கப்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சைகளை மட்டும் நம்பாமல், குடும்பத்தினரின் ஆதரவுடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்குவதே முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.