விஜய்யுடன் பதவியேற்கும் 9 அமைச்சர்கள் யார் யார்? உத்தேச பட்டியல் இதோ!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போகிறது. பெரும் இழுபறிக்குப் பிறகு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேக்கரிடம் சமர்ப்பித்த விஜய், இன்று காலை 10 மணிக்குச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வராகப் பதவியேற்கிறார். விஜய்யுடன் இணைந்து மொத்தம் 9 அமைச்சர்கள் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் குறித்த உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உத்தேசப் பட்டியலின்படி, மிக முக்கியமான பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகியவற்றை முதல்வர் விஜய் தனது வசமே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனுக்குப் பொதுப்பணித்துறையும், சிடிஆர் நிர்மல் குமாருக்கு மின்சாரத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விளையாட்டுத் துறையை ஆதவ் அர்ஜுனா கவனிக்க உள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையை விஜய்யின் நம்பிக்கைக்குரிய புஸ்ஸி என்.ஆனந்த் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை நலத்துறை முஸ்தபாவிற்கும், ஆதி திராவிடர் நலத்துறை ராஜ்மோகனுக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், பத்திரப்பதிவுத் துறையை அருண்ராஜும், பள்ளிக்கல்வித் துறையை வெங்கட்ரமணனும் கவனிப்பார்கள் என அந்த உத்தேசப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பதவியேற்பு விழா முடிந்த கையோடு, வரும் 13-ஆம் தேதிக்குள் விஜய் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இந்தப் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரப் போகும் இந்த அமைச்சரவையின் செயல்பாடு எப்படி இருக்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
