புதுச்சேரியில் வேட்பாளர்கள் யார் யார்? பட்டியலை வெளியிட்டது அதிமுக!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை அதிமுக (AIADMK) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள அதிமுக, இந்த முறை புதுச்சேரியில் 2 தொகுதிகளில் களம் காண்கிறது. இதற்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உப்பளம் தொகுதியில், மாநிலச் செயலாளர் அன்பழகனும், உருளையன்பேட்டை தொகுதியில் ஓ.எம்.ஜி. காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்வருமாறு இடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது: என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக & பிற கட்சிகள்: 14 தொகுதிகள். இதில் அதிமுகவிற்கு 2 இடங்களும், லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் புதுச்சேரியில் ஆளுங்கட்சியாகவும், முக்கிய எதிர்க்கட்சியாகவும் இருந்த அதிமுகவிற்கு, இந்தத் தேர்தலில் வெறும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறுகையில்: "கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் இந்த 2 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். கடந்த தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தோம். ஆனால், இந்த முறை போட்டியிடும் உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.
