அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? இன்று பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோதல்!
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இன்று பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் மற்றொரு முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இலங்கையின் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி) இந்தப் போட்டி தொடங்குகிறது.

சூப்பர் 8 சுற்றின் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாவது இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் 2 போட்டிகளில் விளையாடி 1 புள்ளியுடன் (மழையால் ரத்தான போட்டியின் மூலம் கிடைத்தது) மூன்றாவது இடத்தில் உள்ளது. இலங்கை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும், தனது சொந்த மண்ணில் கௌரவமான வெற்றியுடன் தொடரை முடிக்க இலங்கை முயற்சிக்கும்.

நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், நேற்று இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததால், பாகிஸ்தானுக்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை வீழ்த்துவது மட்டும் போதாது, மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதலில் பேட்டிங் செய்தால், சுமார் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால், இலக்கை சுமார் 13.1 ஓவர்களிலேயே எட்ட வேண்டும். அப்போதுதான் நியூசிலாந்தின் 'நெட் ரன் ரேட்டை' பாகிஸ்தானால் முந்த முடியும். இந்தியாவில் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையில் காணலாம்.
