இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி படுகொலை - யார் இந்த அலிரெசா தங்சிரி?

 
ஈரான் படைத் தளபதி அலிரெசா தங்சிரி ஈரான் படைத் தளபதி அலிரெசா தங்சிரி

ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் (IRGC) கடற்படைப் பிரிவுத் தளபதி அலிரெசா தங்சிரி, இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தப் போர்ச் சூழலில் ஈரானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஒரு ரகசிய மறைவிடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது குறித்துக் கூறுகையில், "ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி, சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த தங்சிரி கொல்லப்பட்டார். இது ஈரானின் புரட்சி காவல் படைக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை" எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் தங்சிரியுடன் இருந்த மேலும் சில உயர்நிலை கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் போர்

யார் இந்த அலிரெசா தங்சிரி?

2018-ஆம் ஆண்டு முதல் IRGC கடற்படைத் தளபதியாகப் பணியாற்றி வந்தார். உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதற்கான முழுப் பொறுப்பும் இவரிடமே இருந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர்.

ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரம்:

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடிப் போர் மூண்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் தளபதிகள் பலரை இஸ்ரேல் இலக்கு வைத்து அழித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தங்சிரியின் மரணம் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்தப் படுகொலைக்கு ஈரான் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் என்பதால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.