“யார் கெத்து?” நடுரோட்டில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்.. பதற வைக்கும் வீடியோ!
திருப்பூர் மாநகரில் இரு வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடுரோட்டில் மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் மோதிக்கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே "யார் கெத்து?" என்ற போட்டியில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் மாலை பள்ளி முடிந்ததும் குமரன் சிலை பேருந்து நிறுத்தத்தில் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, சின்னச்சாமி அம்மாள் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் திரண்டு வந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடுரோட்டில் விரட்டி விரட்டித் தாக்கியதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இது குறித்து தகவலறிந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடினர். மாணவர்கள் நடுரோட்டில் ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அசம்பாவிதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
