"கரூர் சம்பவத்தில் மக்களோட நின்றோர் யார்?” - விஜய் பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், கடந்த காலக் கூட்ட நெரிசல் விபத்து மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய விமரிசனங்களுக்குத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கடுமையான கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி, முதலமைச்சரின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். "மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் பொறுப்புணர்வை உணர்ந்து பேச வேண்டும். தற்பொழுது சட்ட ரீதியிலான விசாரணையில் இருக்கக்கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான விவகாரத்தைப் பற்றி, நாட்டின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசாமல் இருப்பதுதான் நிர்வாக முறைக்கு நல்லது."

விபத்து நடந்த தினத்தில் கரூரில் களத்தில் நின்றவர்கள் யார் என்பது குறித்துப் பேசிய அவர், விஜய்யின் அன்றைய செயல்பாட்டை மறைமுகமாக விமரிசித்தார்.
"கரூர் சம்பவத்தின் போது அங்குப் பாதிக்கப்பட்ட மக்களோடு துயரமான நேரத்தில் நின்றது யார்?, ஓடி வந்து மக்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் அவசர உதவிகளைச் செய்தது யார்? என்பது அங்குள்ள கரூரின் பொதுமக்களுக்கு மிக நன்றாகவே தெரியும்."

"அதே நேரத்தில், அத்தனை பெரிய துயரம் தன் கண் முன்னால் நடந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூடச் சந்திக்காமல் அங்கிருந்து கிளம்பிப் போனவர்கள் யார்? என்பதும் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என திமுக எம்பி கனிமொழி காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.
