“₹4000 கோடி செலவு செய்யும் போது யார் ஆட்சியில் இருந்தது?” - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய வைகோ!
ஊழலை அடியோடு நீக்குவது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் கடந்த கால திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “₹4000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்தது யார்? அப்போது கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காக நாங்கள் வெளியே அதனை விமர்சிக்கவில்லை; என்றாலும், உள்ளுக்குள் பேசும்போது எனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் டெண்டர் கமிஷன் மற்றும் லஞ்சம் கொடுக்கும் நிலை கிடையாது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் இப்போது கமிஷன் கலாச்சாரம் இல்லை, ஊழல் குறைந்துள்ளது.”

“கடந்த ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கிப் பழகிய சில அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால் இந்த அரசைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது. அதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகிறது. ஏற்கனவே ஊழலில் ஊறித் திளைத்த முந்தைய ஆட்சியாளர்கள், தற்போது தவெக அரசு மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்; அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”

“தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள SIR பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் திமுகதான். SIR பணிகள் நடைபெற்றபோது திமுக நிர்வாகிகள்தான் உடன் சென்றனர். அப்போதும் கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காக நாங்கள் எதையும் வெளிப்படையாகப் பேசவில்லை. தமிழக வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்குக் முழுப் பொறுப்பேற்க வேண்டியது திமுகதான். தேர்தல் ஆணையத்தால் தற்போது ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது” எனவும் வைகோ கடுமையாக விமர்சித்தார்.
