தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? ஸ்டாலினா? எடப்பாடியா? சர்ரென உயரும் விஜய்யின் தாக்கம்?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் சூழலில், பிரபல செய்தி தளமான CNN-News18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதை இந்த கருத்துக் கணிப்பின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி எனப் பலப்பரீட்சை நடத்தத் தயாராகி வரும் வேளையில், சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போதைய அரசியல் நிலவரத்தைக் காட்டுகின்றன.
முதலமைச்சர் ரேஸில் முன்னிலை யார்?
2026-ல் யாரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மக்கள் மு.க. ஸ்டாலின்: 39.9%, எடப்பாடி பழனிசாமி: 37.5%, விஜய் (தவெக): 14.7% என்று பதில் அளித்துள்ளனர். தற்போதைய முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் இடையே வெறும் 2.4% மட்டுமே வித்தியாசம் இருப்பது, வரவிருக்கும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய 'நெக்-டு-நெக்' போட்டி இருப்பதை உணர்த்துகிறது.

வாக்கு சதவீதக் கணக்கு:
கட்சிகள் பெறக்கூடிய தோராயமான வாக்கு சதவீதமாக திமுக கூட்டணி: 40.1%, அதிமுக கூட்டணி: 38.1%, தவெக: 14.8%, நாம் தமிழர்: 2.7%, இதர கட்சிகள் / முடிவெடுக்காதவர்கள்: 4.7% என்று பதிவாகியிருக்கிறது.
யாருக்கு எத்தனை இடங்கள்? (234 தொகுதிகள்)
ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒரு இழுபறி நிலையை நோக்கியே சுட்டிக்காட்டுகின்றன: திமுக கூட்டணி: 113 முதல் 123 இடங்கள், அதிமுக கூட்டணி: 106 முதல் 116 இடங்கள், தவெக : 2 முதல் 8 இடங்கள்
மக்களின் முக்கியப் பிரச்சனைகள்:
தேர்தலில் எதிரொலிக்கப்போகும் முக்கியப் பிரச்சனைகளாக மக்கள் கருதுபவை: மது மற்றும் போதைப்பொருள்: 20.1%, பெண்கள் பாதுகாப்பு: 17.8%, சட்டம் ஒழுங்கு: 17.3%, வேலைவாய்ப்பின்மை: 15.5%, வளர்ச்சி இன்மை: 5.2% என்று தெரிய வந்துள்ளது.

ஆட்சியின் செயல்பாடு குறித்த மதிப்பீடு:
தற்போதைய அரசின் செயல்பாட்டை 32.7% பேர் 'மிகவும் நன்றாக உள்ளது' என்றும், அதே சமயம் 20.1% பேர் 'மிகவும் மோசம்' என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 2016-2021 (ஜெயலலிதா & இபிஎஸ்) காலக்கட்டமே சிறந்தது என 44.6% பேர் கூறியுள்ளது ஆளும் தரப்பிற்குச் சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பின் படி, திமுக கூட்டணி நூலிழையில் முன்னிலை பெற்றாலும், அதிமுக கூட்டணி மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 14.8% வாக்குகளைப் பிரிப்பது, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
