தமிழக அரசின் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் - 3 இலவச காஸ் சிலிண்டர்கள் யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கும் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் முதற்கட்டமாக, வரும் 2027 பொங்கல் திருநாள் அன்று இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். இவற்றுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளனர்.

இலவச சிலிண்டருக்கான தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொங்கல், தமிழ்புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று பண்டிகைகளின் முந்தைய நாட்களில் இந்தத் தொகை செலுத்தப்படும். இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 4,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் (உஜ்வாலா திட்டம் உள்பட) தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மின் ஆளுமை முகமை வாயிலாகத் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
