பெண்களின் ஓட்டு யாருக்கு?! - திமுக, அதிமுக, தவெக அள்ளிக் கொடுக்கும் ‘உரிமைத் தொகை’ - சீமானின் ‘தனிப்பாதை’ வியூகம் என்ன?

 
தமிழகம் தேர்தல் தமிழகம் தேர்தல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்போதும் ‘வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக’ இருக்கும் பெண் வாக்காளர்களைக் கவர, இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சிகள் தாராளமாக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. இலவசங்கள் ஒருபுறம், பாதுகாப்பு மறுபுறம் எனத் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

தற்போது வழங்கி வரும் ரூ.1,000 உரிமைத் தொகையைத் தனது பிளஸ் பாயிண்டாகக் கருதும் திமுக, இந்தத் தேர்தலில் அதனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதியையும் மலிவாக வழங்கியுள்ளது.

சீமான்

திமுகவிற்குப் போட்டியாக அதிமுகவும் பெண்களுக்கான நலத்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. ‘குல விளக்கு’ திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், அத்துடன் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

முதியோர் மற்றும் கைம்பெண் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் மற்றும் பெண்களுக்குச் மானிய விலையில் இருசக்கர வாகனம் மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. புதிதாகக் களம் காணும் தமிழக வெற்றி கழகம், பெண்களைக் கவர ‘பாசக்கார’ வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது. மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே போய், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்ற ‘அண்ணன் சீர் திட்டம்’ மற்றும் மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை அவர் முன்மொழிந்துள்ளார். ‘ராணி வேலுநாச்சியார் படை’ என்ற பெயரில் பெண்களுக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையை உருவாக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மற்ற கட்சிகள் இலவசங்களைப் பணமாகத் தரும்போது, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. "பிச்சைத் துட்டு வேண்டாம், பெண்களுக்குத் தகுந்த ஊதியத்துடன் கூடிய அரசு வேலை வேண்டும்" என்பதே சீமானின் வாதம்.

உரிமைத்தொகை

பெண்களுக்குத் தனி வாரியம், அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு போன்றவற்றுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்.

பணமாகப் பெற்றுக் கொள்வதைத் தமிழகப் பெண்கள் விரும்புவார்களா? அல்லது சீமான் கூறுவது போல நிரந்தரமான வேலையையும் பாதுகாப்பையும் தேர்ந்தெடுப்பார்களா? என்பதை வரும் தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள் ஓட்டு யாருக்கு விழுகிறதோ, அவர்களுக்கே அரியணை என்பதால், அனைத்துக் கட்சிகளும் பெண்களைத் தங்களது பிரதான இலக்காகக் கொண்டுள்ளன.