"அத்தை சீர் யார் தருவா?" - சட்டசபையில் செளமியா அன்புமணி எழுப்பிய கேள்வி!

 
செளமியா அன்புமணி

சட்டப்பேரவையில் பேசிய சவுமியா அன்புமணி, அரசின் நலத்திட்டப் பெயர்களை நையாண்டி செய்து, விவசாயிகளின் உண்மையான வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் பெரிய போட்டியே நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'அண்ணன் சீர்', 'தாய்மாமன் சீர்' போன்ற சீர்வரிசைத் திட்டங்கள் குறித்துப் பேசினார். "தாய்மாமனாக இருந்து சீர் கொடுத்து விடலாம்; ஆனால் பாசத்தோடு இருக்கும் அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம் யார் கொடுப்பார்கள்?" எனச் சுவாரசியமாக வினா எழுப்பினார்.

பெயரளவில் மட்டும் சீர்வரிசைத் திட்டங்களை அறிவிக்காமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நிலையான திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன்மையான எதிர்பார்ப்பு எனச் சுட்டிக்காட்டினார்.

அரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது போன்ற நடவடிக்கைகளே மக்களுக்கு உண்மையான பயனைத் தரும் எனத் தெரிவித்தார்.