இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்!

 
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா.. நிதிஷ், ரிங்கு அதிரடி!

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மகுடத்தை சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று நியூசிலாந்துடன் மோதப்போகும் அந்த இரண்டாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி நடைபெறுகிறது. 

இந்தியா டி20

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த இரண்டு தொடர்களிலும் (2022 மற்றும் 2024) இந்த இரு அணிகளுமே அரையிறுதியில் மோதின. இதில் தலா ஒரு முறை இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடக்கும் மூன்றாவது தொடர்ச்சியான மோதல் 'ட்ரை-பிரேக்கர்' போல அமைந்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பு 2007, 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.

இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் மாயாஜாலப் பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங்கில் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு வருகிறது. பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து

மும்பை வான்கடே மைதானம் பேட்டர்களுக்குச் சொர்க்கமாகத் திகழும். சிறிய எல்லைகள் கொண்ட மைதானம் என்பதால், இன்று சிக்ஸர் மழைக்குக் குறைவிருக்காது. மாலை நேரத்தில் பனித்தாக்கம் (Dew) இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால், இந்திய அணிக்கு ஆதரவாக மும்பை மைதானம் நீலக் கடலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா மோதுவதைக் காணக் கோடி கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.