ஆடி மாதத்தில் ஏன் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகிறார்கள்? - இது தான் நிஜமான காரணம்!
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்கு உரிய மிக உன்னதமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் புதுமண தம்பதியரைப் பிரித்து வைப்பது நம் தமிழக கலாசாரத்தில் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகும். மணமகளை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் இந்த வழக்கத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீக, அறிவியல் மற்றும் தட்பவெப்ப காரணங்கள் பலரையும் வியக்க வைப்பவை.
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் இணைந்தால், பெண் கருவுறுவது ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நிகழும். அவ்வாறு கருத்தரிக்கும் பட்சத்தில், சரியாக பத்து மாதங்கள் கழித்து தமிழ் மாதமான சித்திரை அல்லது வைகாசியில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் தமிழ்நாட்டின் மிகக் கடுமையான கோடைக் காலமாகும் (கத்தரி வெயில் காலம்). இந்த உக்கிரமான வெயில் காலங்களில் பிரசவம் நடப்பது, பிரசவித்த தாய்க்கும் புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கும் உடல் ரீதியாகப் பெரும் அசெளகரியங்களை உண்டாக்கும்.
கோடைக் காலத்தில் அம்மை நோய், வியர்க்குரு மற்றும் வெப்ப மண்டலத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம். இதனால் தான், அந்த வெப்பமான காலக் கட்டத்தில் குழந்தை பிறப்பதைத் தவிர்க்கும் நோக்கில் முன்னோர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தனர்.

ஆடி மாதம் என்பது தமிழக விவசாயிகளின் மிக முக்கிய வாழ்வாதாரக் காலமாகும். "ஆடிப் பட்டம் தேடி விதை" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த மாதத்தில் தான் உழவர்கள் தங்களது விவசாயப் பணிகளை முழு வீச்சில் தொடங்குவார்கள்.
புதுமணத் தம்பதிகள் ஒன்றாக இருக்கும் போது, குடும்பக் கடமைகளில் இருந்து கவனம் சிதற வாய்ப்புள்ளது. எனவே, ஆண்கள் தங்களது விவசாயப் பணிகளில் முழுக் கவனத்தையும் செலுத்தி, கடின உழைப்பைத் தர வேண்டும் என்பதற்காகவும், தம்பதியர் சில காலம் பிரிந்திருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
ஆடி மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் மனிதர்கள் தங்களது உலகியல் ஆசைகள் மற்றும் தாம்பத்திய சுகங்களில் மூழ்கி மனதைச் சிதறவிடக் கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணமாகும். மனக் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளவே இந்த ஆன்மீகச் சடங்கு உருவாக்கப்பட்டது. பாரம்பரியமாக இந்த வழக்கம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும், தற்கால மருத்துவ உலகம் இதற்கு வேறு ஒரு பார்வையை முன்வைக்கிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், ஆடி மாதத்தில் தம்பதியர் இணைவதற்கோ அல்லது பெண் கருவுறுவதற்கோ எந்தவித அறிவியல் பூர்வமான தடையும் இல்லை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். தற்காலத்தில் நவீன மருத்துவ வசதிகளும், குளிர்சாதன வசதிகளும் நிறைந்த பிரசவ அறைகளும் இருப்பதால், கோடைக் காலப் பிரசவங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதும் தற்போதைய நிதர்சனமாகும். எனினும், என்னதான் ஏசி வசதிகள் இருந்தாலும், கோடைக் காலங்களில் பொதுவாகவே நம் உடலில் ஒரு சோம்பலும், அசெளகரியமும் ஏற்படுவதை உணர்ந்திருக்கலாம். கர்ப்பிணிகள் சாதாரண நாட்களிலேயே சிரமப்படும் போது, உடல் ரீதியாக கோடைக்காலத்தில் பிரசவம் என்பது கூடுதல் அசெளகரியமாக இருக்கும் என்பதால் தவிர்ப்பது சிறந்தது.
