"கார்ல வரும் போதாவது ஸ்கிரிப்ட் பேப்பரை 5 முறை படிச்சுட்டு வாங்க - எதுக்கு ஆட்சியில் இருக்கீங்க?!" - மேயர் ப்ரியா ஆவேசம்!
"எல்லாத்துக்கும் திமுகதான் காரணம்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு ஆட்சில இருக்கீங்க? கார்ல வர்றப்பயாவது ஸ்கிரிப்ட் பேப்பரை இன்னும் 5 தடவை படிச்சிட்டு வரலாம்!" எனத் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்களை நோக்கிச் சென்னை மேயர் பிரியா அரசியல் விமர்சனங்களை முன்வைத்து பேசியிருப்பது அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சென்னை மேயர் பிரியா, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்தார். மேயர் பிரியா பேசுகையில், "தமிழகத்தில் இன்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. தாங்கள் தான் இப்போது ஆட்சியில் இருக்கிறோம் என்பதே தெரியாமல், இன்னமும் திமுக-வை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் திமுக-வை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? கவர்ச்சி அரசியல் என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருகிறது. கவர்ச்சி அரசியல் செய்யாமல், களப்பணி செய்தா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்?"

"இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள் ரீல்ஸ் போட்டு முதலீடுகளை அழைக்கிறார்கள். அந்த ரீல்ஸ் எத்தனை பேரை ஈர்க்கும் என்று தெரியவில்லை. ரீல்ஸ்க்கும் ரியாலிட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் தற்போதைய தமிழக அரசை எடுத்துச் செல்கின்றனர். இது ஒன்றும் திரையில் ஓடுகிற படம் கிடையாது. இது தமிழ்நாடு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்! முதல்வர் விஜய் கார்ல வர்றப்பயாவது, தனக்குக் கொடுக்கப்படும் ஸ்கிரிப்ட் பேப்பரை இன்னும் 5 தடவை படிச்சிட்டு வந்து பேசலாம்."

"ஒரு கண்டெண்ட்டை ட்ரெண்ட் பண்ணும் விர்ச்சுவல் வாரியர்ஸே.. உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா? நீங்கள் போடும் கண்டெண்ட்டில் எது உண்மை, எது பொய் என்று பார்ப்பதே கிடையாது. மதிப்பிற்குரிய ஆதவ் அர்ஜுனா பேசினார், நாங்கள் இதைச் செய்து விடுவோம், அதைச் செய்து விடுவோம் என்று... நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், ஒரு திமுககாரனைக்கூட உங்களால் என்றைக்கும் அசைக்க முடியாது. என்றைக்கு இருந்தாலும் கருப்பு சிவப்பு கொடி தமிழ்நாட்டில் பறக்கத்தான் செய்யும். முதலில் உங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸையும், உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் நேராகக் களத்திற்குச் சென்று களப்பணி ஆற்றச் சொல்லுங்கள்" என்று மேயர் பிரியா தவெக-வின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், விர்ச்சுவல் வாரியர்ஸையும் தனது பேச்சில் வறுத்தெடுத்துள்ளார்.
