மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - எல். முருகன் விளக்கம்!
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராகப் பணியாற்றி வந்த எல். முருகன், தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து நேரடி களப்பணியாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா முடிவ குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "பாரதிய ஜனதா கட்சி எனும் பேரியக்கத்தில் அடிமட்டத் தொண்டர்களுடன் தோளோடு தோள் நின்று இணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே எனது மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். குறிப்பாக, வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பூத் மட்டத்திலிருந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்க திட்டமிட்டுள்ளேன். தமிழ்நாட்டில் பாஜக-வை மேலும் வலுப்படுத்துவதிலும், அமைப்பை விரிவுபடுத்துவதிலும் என்னை முழு நேரமாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது அரசியல் பயணத்தின் தாரக மந்திரத்தைக் குறிப்பிட்டு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "எனது வாழ்க்கையில் 'முதலில் தேசம், அடுத்ததாக கட்சி, இறுதியாகவே எனது நலம்' என்ற தத்துவத்தையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையும் பாக்கியமும் ஆகும்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும், எனது தாய்நிலமான தமிழ்நாட்டிற்கும் சேவையாற்ற வாய்ப்பளித்ததற்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், "பிரதமர் மோடி அவர்களின் சமீபத்திய தமிழக வருகை மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சராகச் செயல்பட எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராகவும், மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்த எல்.முருகன், தற்போது நேரடியாகக் கட்சிப் பணிகளிலும், வரவிருக்கும் தேர்தல்களுக்கான களப்பணிகளிலும் முழுவீச்சில் இறங்கவுள்ளது தமிழக அரசியல் களத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
