"விசிக அலுவலகத்திற்கு சோபா வந்தது ஏன்?" - அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்!

 
சோபா சோபா

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த "சோபா விவகாரம்" குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன் மீதும் தன் கட்சி மீதும் பரப்பப்படும் அவதூறுகளுக்குத் தெளிவான பதிலடி கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருமாவளவனைச் சந்திக்க வருவதற்கு முன்னதாக விசிக அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது பெரும் பேசுபொருளானது. இது குறித்துப் பேசிய திருமாவளவன், "முதல்வர் விஜய் வருகைக்காக அந்தச் சோபாக்கள் ஆர்டர் செய்யப்படவில்லை. அவை ஏற்கனவே அலுவலகத் தேவைக்காக ஆர்டர் செய்யப்பட்டவை. அது தற்செயலாக அன்று வந்து இறங்கியது. இதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிடவில்லை. ஆனால், சிலர் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

சோபா

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் விசிக தாமதம் காட்டியது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். "முதல்வர் பதவிக்காகவே நான் தவெக ஆதரவைத் தாமதப்படுத்தியதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. நான் எந்தப் பதவிக்காகவும் காத்திருக்கவில்லை. தவெக-வின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு அமைந்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு இடையே, "தலித் ஒருவர் முதல்வர் ஆவதை எடப்பாடி பழனிசாமி தடுத்தார்" எனச் சி.வி. சண்முகம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், "இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் திருமா

விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் விசிக-வின் நிலைப்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் திருமாவளவன் அளித்துள்ள இந்த விளக்கம், அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த யூகங்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.