'விலை போகாத தங்கம்' விலகியது ஏன்? திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ!
ராணிப்பேட்டை மாவட்ட அமமுக செயலாளரும், சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி. பார்த்திபன், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முறைப்படி திமுகவில் இணைந்தார்.
கடந்த ஆண்டு சோளிங்கரில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி. தினகரன், "யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன் தான்; வரும் தேர்தலில் இவரே சோளிங்கர் வேட்பாளர்" என அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது காட்சிகள் மாறியுள்ளன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்தபோது, அக்கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பார்த்திபன் குறிவைத்த சோளிங்கர் தொகுதி, கூட்டணியில் இருந்த பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த பார்த்திபன் கடும் அதிருப்தி அடைந்தார். கடந்த வாரம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பார்த்திபன், அமமுக-விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்த என்.ஜி. பார்த்திபனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

சோளிங்கர் பகுதியில் வலுவான செல்வாக்கு கொண்ட பார்த்திபன் விலகியது, அந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. அதே சமயம், பார்த்திபனின் வருகை ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக-வின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.
