ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் ஈராக் கொண்டு செல்லப்படுவது ஏன்? ஆன்மிக, அரசியல் பின்னணி விபரங்கள்!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் ஈரானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர்ச் சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள், 7 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வியப்பளிக்கும் ஒரு முக்கிய அம்சமாக, ஈரானின் தலைவராக இருந்த கமேனியின் உடல், வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அண்டை நாடான ஈராக்கிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதற்கான ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான முக்கியக் காரணங்கள் வெளியாகி உள்ளது.
முஸ்லிம்கள் தங்களது மிக புனிதமான இடங்களாக மக்கா மற்றும் மதீனாவைத் தொழுவதைப் போல, ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஈராக்கில் உள்ள நஜஃப் மற்றும் கர்பலா ஆகிய நகரங்களை தங்களது அடுத்தடுத்த மிக முக்கியப் புனிதத் தலங்களாகக் கருதுகின்றனர். நஜஃப் நகரில் ஷியாக்களின் முதல் இமாமான 'இமாம் அலி'-யின் புனிதத் தர்காவும், கர்பலாவில் 'இமாம் ஹுசைன்' மற்றும் 'அப்பாஸ் இப்னு அலி' ஆகியோரின் புனிதத் தர்காக்களும் அமைந்துள்ளன.

ஆன்மிக ரீதியாக மிக உயரிய 'அயதுல்லா' அந்தஸ்தில் இருந்த கமேனியின் உடல், இந்தத் தர்காக்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிறப்பு இறுதி வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன. வரலாற்றுத் தரவுகளின்படி, கமேனி கடைசியாகக் கடந்த 1957-ஆம் ஆண்டுதான் ஈராக்கிற்கு நேரில் சென்றிருந்தார். அதன் பிறகு அரசியல் தடைகளால் போக முடியாத சூழலில், தற்போது 69 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் இந்த புனிதத் தலங்களுக்குச் செல்லவுள்ளது.
ஈரானிய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஈராக் நாட்டு அரசியல் தலைவர்கள், மத அறிஞர்கள், முக்கியப் பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் மக்கள் விடுத்த தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஈரானின் ஆதரவு பெற்ற பல அரசியல் மற்றும் ஆயுதக் குழுக்கள் உள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான ஷியா மக்கள் கமேனியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஆவலாக உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான கடுமையான போருக்குப் பிறகு இந்த இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. கமேனியின் உடலை ஈராக் எல்லைக்குள் கொண்டு சென்று ஊர்வலம் நடத்துவதன் மூலம், தங்களுக்கு எதிரான போர்ச் சூழலிலும் "ஈரான் - ஈராக் இடையேயான பிராந்திய மற்றும் மத ரீதியான கூட்டணி" இன்னும் எவ்வளவு வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்ற ஈரான் இந்த உத்தியைக் கையாண்டுள்ளது.
ஈராக்கின் நஜஃப் மற்றும் கர்பலா புனித நகரங்களில் இரண்டு நாட்கள் வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 9-ம் தேதி கமேனியின் உடல் மீண்டும் ஈரானுக்குக் கொண்டு வரப்படும். அங்குள்ள ஷியாக்களின் புனித நகரமான மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா தர்கா வளாகத்தில் அவரது உடல் முறைப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த 7 நாள் இறுதிச்சடங்கு ஊர்வலங்களில் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 2 முதல் 3 கோடி மக்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
