"உங்களுக்கு ஏன் வயிறு எரியுது? மே 4க்கு பின் நீங்கதான் ICU போகணும்!" - இபிஎஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா!

 
பிரேமலதா பிரேமலதா

அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணி முறிவு, தற்போது தனிநபர் விமர்சனங்களாகவும், 'ஒப்பந்தம்' தொடர்பான ஆதாரப் போராகவும் உருவெடுத்துள்ளது. திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இபிஎஸ்-க்கு எதிராகப் பல்வேறு பகீர் புகார்களை முன்வைத்தார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக - தேமுதிக இடையே போடப்பட்ட ரகசிய ஒப்பந்த நகலைச் செய்தியாளர்களிடம் பிரேமலதா காண்பித்தார். "2024-ல் எங்களுடன் கூட்டணி அமைத்தபோது, 5 எம்.பி தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அந்த வார்த்தையை நம்பித் தான் நாங்கள் அவருடன் பயணித்தோம். ஆனால், சொன்னபடி தராமல் எங்களை ஏமாற்றிவிட்டார்" என பிரேமலதா குற்றம் சாட்டினார்.

பிரேமலதா

"எங்களை அரை சதவீதக் கட்சி என்கிறாரே, அப்படியென்றால் எங்களுடன் கூட்டணி அமைக்கும்போது அது அவருக்குத் தெரியவில்லையா? தற்போது தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் அவருக்கு வயிறு எரிகிறது. அந்த வயிறு கருகும் வாசனை தமிழ்நாடு முழுவதும் வீசுகிறது. 2011 முதல் 2026 வரை உங்களோடு தானே இருந்தோம்? ஒரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுவது அழகல்ல. நீங்கள் இவ்வாறு பேசினால், எங்களுக்கும் அதே பாணியில் பதிலளிக்கத் தெரியும்," என எச்சரித்தார்.

தேமுதிக 'ஐசியூ' சிகிச்சையில் இருப்பதாக இபிஎஸ் விமர்சித்ததற்கு, "தேமுதிக ஐசியூ-வில் இருப்பதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி, வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அவர் ஐசியூ-வுக்குப் போகாமல் பார்த்துக் கொள்ளட்டும். மக்கள் அவருக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

பிரேமலதா

பிரச்சாரங்களில் கண்ணியம் தவறினால் மக்களே அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், தேமுதிகவின் பலம் என்ன என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும் எனத் தன்னம்பிக்கையுடன் கூறினார்.