திமுக தான் அதிக வெற்றி.. ஆனாலும் விஜய் பெரம்பூரை டிக் செய்தது ஏன்? 'மாஸ்டர் பிளான்' பின்னணி!

 
விஜய் விஜய்

இது வரையில் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே அதிக முறை திமுகவே பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெற்றி பெற்றிருந்த சமயத்திலும் திமுக கூட்டணியில் இருந்துள்ளது. பொதுவாகவே நீண்ட காலங்களாகவே சென்னை எப்போதும் திமுக கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தான் பிரபலங்கள் போட்டியிடுகையில், சென்னை சுற்றுவட்டார தொகுதிகளைத் தவிர்த்து விடுவார்கள். கடந்த தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் இந்த முறை தொகுதி மாறியதும் இதனால் தான் என்கிறார்கள். இத்தனை புள்ளிவிவரங்கள் இருந்தும் விஜய் ஏன் பெரம்பூரைத் தேர்ந்தெடுத்தார் என்று அரசியல் விமர்சகர்கள் குழம்பி போயிருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட வேறொரு கணக்கு இருக்கிறது.

1. அதிக இளைஞர்கள்:

சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பெரம்பூர் (சுமார் 2.22 லட்சம் வாக்காளர்கள்). இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த முறை சுமார் 24,000 புதிய வாக்காளர்கள் (முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள்) இந்தத் தொகுதியில் இணைந்துள்ளனர். விஜய்யின் பிரதான பலமே இளைஞர்கள் என்பதாலும், முதல் முறை வாக்களிக்கப் போகிறவர்களும் என்பதால் இது அவருக்குப் பெரிய சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

தவெக விஜய்

2. தவெக-வின் பலமான உறுப்பினர் சேர்க்கை:

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு நடத்தப்பட்ட உள்கட்சி ஆய்வுகளின்படி, சென்னையில் அக்கட்சிக்கு அதிகப்படியான உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்ட தொகுதிகளில் பெரம்பூர் முதலிடத்தில் உள்ளது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் கிளைக் கழகங்கள் பெரம்பூர் தொகுதியில் மிகவும் வலுவாக இருப்பதால், தேர்தல் பணிகளை எளிதாகக் கையாள முடியும் என விஜய் நம்புகிறார்.

3. சமூக ரீதியிலான வாக்கு வங்கி:

பெரம்பூர் தொகுதியில் கணிசமான அளவில் சிறுபான்மையினர் குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க மக்கள் வசிக்கின்றனர். விஜய்யின் தனிப்பட்ட பின்னணி மற்றும் அவர் முன்வைக்கும் 'மதச்சார்பற்ற சமூக நீதி' கொள்கைகள் இந்தத் தரப்பு மக்களை எளிதில் கவரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, வட சென்னை பகுதியின் அடையாளமாக இருக்கும் தொழிலாளர் வர்க்க மக்களின் ஆதரவைப் பெறுவது அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பலம் சேர்க்கும்.

விஜய் தவெக ஸ்டாலின்

4. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி?

பழைய கணக்குகளை எல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால், இப்போது அண்ணா, கலைஞர் என்று மூத்த தலைவர்கள் யாரும் கிடையாது. ஸ்டாலின் ஆட்சியில் அதிருப்தி நிலவியது. பெரம்பூரின் தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ.ம் ஆர்.டி. சேகர் மீது தொகுதி மக்கள் மத்தியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் மேலாண்மை தொடர்பாகக் குறைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த 'எதிர்ப்பு வாக்குகளை' அறுவடை செய்ய பெரம்பூர் சரியான களம் என்று தவெக தலைமை கருதுகிறது.

5. வட சென்னையின் அரசியல் முக்கியத்துவம்:

பெரம்பூர் என்பது பாரம்பரியமாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. அத்தகைய ஒரு பலமான கோட்டையில் நேரடியாகக் களம் இறங்கி வெற்றி பெறுவதன் மூலம், தான் ஒரு 'மாற்று அரசியல் சக்தி' என்பதைத் தமிழகம் முழுவதும் உரக்கச் சொல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.