எல்.என்.ஜி.யில் இயங்கும் இரட்டை எரிபொருள் ரயில் ஏன் அறிமுகம்? - ரயில்வே அதிகாரிகள் விளக்கம்!

 
எல்.என்.ஜி இரட்டை எரிபொருள் ரயில்

இந்திய ரயில்வேயில் 99.6 சதவீதம் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் டீசலில் இயங்கும் இரட்டை எரிபொருள் (Dual-fuel) ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சபர்மதி ரயில் நிலையத்தில் இருந்து 8 பெட்டிகளைக் கொண்ட குளிர்சாதன வசதியற்ற இரட்டை எரிபொருள் ரயில் சமீபத்தில் தனது சேவையைத் தொடங்கியது. இது முற்றிலும் புதிய ரயில் அல்ல; ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டீசல் மின்சார ரயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ரயில்வே கோட்டத்தில் டீசல் என்ஜினை எல்.என்.ஜி.யில் இயங்கும் வகையில் மாற்றியமைக்க ரூ.1.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள டீசல் மின்சார ரயில்களை, எல்.என்.ஜி. மூலம் இயங்கும் வகையில் படிப்படியாக மாற்றுவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டீசலுக்கு மாற்றாக எல்.என்.ஜி. பயன்படுத்துவதன் மூலம் ரயில்வேயின் அதிகப்படியான எரிபொருள் செலவு கணிசமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசு வெளியேற்றமும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரயில்களையே மாற்றி அமைப்பதால், புதிய ரயில்களை வாங்குவதற்கான கோடிக்கணக்கான நிதி சேமிக்கப்படுகிறது. 100% மின்மயமாக்கலை நெருங்கினாலும், இன்னும் மின்சார வசதி முழுமையாக இல்லாத வழித்தடங்கள், குறைந்த போக்குவரத்து கொண்ட கிளைப் பாதைகள் போன்றவற்றில் இந்த ரயில்களைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.