சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஓய்வு அறிவிப்பு!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்டருமான கே.எஸ்.பரத், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ஸ்ரீகர் பரத் (கே.எஸ்.பரத்), உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆந்திர அணிக்காக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இதன் மூலம் இந்திய அணியின் கவனத்தை ஈர்த்த அவர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமானார்.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி அணியில் இல்லாத காலத்தில், இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் செயல்பட்டார். 2023-ஆம் ஆண்டு லண்டன் ஓவலில் நடைபெற்ற புகழ்பெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பரத், 221 ரன்களை எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறியதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இவருக்கு இந்திய தேசிய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட்டின் வருகை, துருவ் ஜூரல் போன்ற இளம் வீரர்களின் எழுச்சி காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக இவர் அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தனது ஓய்வு குறித்துப் பேசிய கே.எஸ்.பரத், "இந்திய நீல நிறச் சீருடையை அணிந்து நாட்டின் பெருமைக்காக விளையாடியது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். எனது கிரிக்கெட் பயணத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும்), பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
32 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் விடை கொடுத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
