மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரம்... மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை!
குஜராத் மாநிலத்தில் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்ற ஆத்திரத்தில், கொடூரமான முறையில் தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வாவ்-தராட் மாவட்டம் சுய்காம் (Suigam) பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராவல். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த அசோக் ராவலின் மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

மனைவி தன்னை விட்டுப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றதால் கடுமையான ஆத்திரத்திலும் விரக்தியிலும் இருந்த அசோக் ராவல், எப்படியாவது மனைவியை பழிவாங்க வேண்டும் அல்லது அவளது கோபத்தைத் தூண்ட வேண்டும் என்ற விகாரமான எண்ணத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 13-ஆம் தேதியன்று அவர் தனது இரண்டரை வயது பச்சிளம் மகனைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளான்.
தந்தை மீது எந்தவித சந்தேகமும் கொள்ளாத அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மீது அசோக் ராவல் திடீரென பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். தீயில் கருகிப் படுகாயமடைந்து அலறித்துடித்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தன் சொந்த மகனையே கொடூரமாகக் கொன்றதைத் தொடர்ந்து, தான் செய்த பாவகாரியத்தை வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைக்கும் நோக்கில் அசோக் ராவல் திட்டமிட்டுள்ளார். உயிரிழந்த குழந்தையின் உடலை ரகசியமாக அருகிலுள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று எவ்வித தகவலும் அளிக்காமல் அவசரமாகப் புதைத்துள்ளார்.

இதனிடையே, சிறுவனைக் காணாமல் திடுக்கிட்ட அவனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்துத் தீவிரமாக விசாரித்துள்ளனர். அசோக் ராவலின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள சுய்காம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தந்தை அசோக் ராவலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கோபத்தைத் தீர்க்கத் தன் சொந்தக் குழந்தையின் உயிரையே பறித்த தந்தையின் இந்தச் செயல் குஜராத் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
