சென்னையில் மெரினா உட்பட 44 இடங்களில் இலவச வைபை வசதி... பொதுமக்கள் வரவேற்பு!

 
 வைபை

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பொதுமக்களுக்கு எளிமையான சேவைகளை வழங்குவதற்கும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் இந்தச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்கள்கூடும் முக்கியப் பகுதிகளில் முடங்கியிருந்த இலவச இணைய வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

வைபை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும் இணையசேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்கள் என மொத்தம் 44 இடங்களில் இந்த வசதி நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களது செல்பேசியில் இணைய இணைப்பை இயக்கி எளிய முறையில் குறுஞ்செய்தி குறியீட்டைப் பதிவு செய்து இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வைபை

இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்ற இடங்களிலும் புதிய வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்திற்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் இளைஞர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.