ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்துக் கரும்பை ருசித்த காட்டு யானை!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில், கரும்பு ஏற்றி வந்த லாரியைச் சாலையில் வழிமறித்துக் காட்டு யானை ஒன்று கரும்புகளை எடுத்துச் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கரும்பு கட்டுகளை ஏற்றிச் சென்ற லாரியைக் கண்டதும், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை திடீரெனச் சாலைக்கு வந்து லாரியை வழிமறித்தது.
யானையைக் கண்டதும் ஓட்டுநர் லாரியின் வேகத்தைக் குறைத்தார். லாரியை நெருங்கிய யானை, அதில் அடுக்கப்பட்டிருந்த கரும்பு கட்டுகளைத் தன் தும்பிக்கையால் எடுத்துப் பொறுமையாகச் சாப்பிட்டது.
யானை நடுரோட்டில் நின்றபடி கரும்புகளைச் சாப்பிட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானை கரும்புகளைச் சாப்பிட்ட இடைவெளியில், லாரி ஓட்டுநர் வாகனத்தைச் சமயோசிதமாக மெதுவாக இயக்கி யானையிடமிருந்து லாவகமாகக் கடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து யானையும் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதால், அப்பகுதியில் நிலவிய பரபரப்பு தணிந்தது.
