காட்டு யானை 2 முறை மிதித்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி!

 
காட்டு யானை பைக்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவரைக் காட்டு யானை வழிமறித்துத் தாக்கி 2 முறை மிதித்தபோதிலும், அவர் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்தை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதி வழியாக ஹரித்வார் - டேராடூன் நெடுஞ்சாலை செல்கிறது. இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், இந்தச் சாலையில் உள்ள நேபாள பார்ம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியேறிய காட்டு யானை ஒன்று, சாலையின் குறுக்கே வந்து அந்த வாகன ஓட்டியை வழிமறித்தது.

எதிரே ஆக்ரோஷமாக நின்ற யானையைக் கண்டதும் நிலைதடுமாறிய அந்த நபர், இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனடியாக அருகே வந்த காட்டு யானை, கீழே விழுந்து கிடந்த அந்த நபரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் 2 முறை பலமாக மிதித்தது.

யானை மிதித்ததால் அந்த நபரின் உயிருக்குப் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், அடுத்த சில நொடிகளிலேயே அந்த யானை ஆக்ரோஷம் தணிந்து அங்கிருந்து அமைதியாக வனப்பகுதிக்குள் விலகிச் சென்றது.

யானை சென்றவுடன், கீழே விழுந்து கிடந்த அந்த நபர் எவ்வித வெளிப்படையான காயங்களும் இன்றி உடனடியாக எழுந்து நின்றார். இந்தத் திகிலூட்டும் காட்சியை அவ்வழியாக வந்த சிவா ஷர்மா என்ற கார் ஓட்டுநர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ராஜாஜி புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள இந்தச் சாலையில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.