ஈரோட்டில் தண்ணீர் குடிக்க வந்த பெண் காட்டு யானை சேற்றில் சிக்கித் தவிப்பு - தீயணைப்புத் துறை, வனத்துறையினர் மீட்டனர்!
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகப் பகுதிக்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதிக்குத் தண்ணீர் குடிக்க வந்த பெண் காட்டு யானை ஒன்று ஆழமான சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாகத் தவித்து வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதிக்குத் தண்ணீர் அருந்தச் சென்ற பெண் காட்டு யானை எதிர்பாராதவிதமாக அங்குள்ள சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டது. சேற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால், அதனால் கரையேற முடியவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் ஆகியோர் இணைந்து யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யானையைக் காப்பாற்றும் முயற்சியில் ஜேசிபி இயந்திரங்கள், கிரேன் மற்றும் பலத்த கயிறுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நேரமாகச் சேற்றில் போராடியதால் யானை சோர்வடைந்து படுத்துவிட்டதாகவும், இருப்பினும் அதனைப் பத்திரமாக மீட்டுவிட்டுக் காட்டுப் பகுதிக்குள் அனுப்பி விடுவோம் என்றும் வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
