பிரான்ஸில் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ - 3,250 ஏக்கர் நாசம்!

 
காட்டுத்தீ பிரான்ஸ் பாரீஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பவுன்டைன்புளூ வனப்பகுதியில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயால், சுமார் 3,250 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மத்திய ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அரச குடும்பத்தினரின் வேட்டைப் பகுதியாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவுன்டைன்புளூ வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பற்றிக் கொண்டது. காற்றின் வேகத்தால் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது.

இதனால், உடனடியாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் வசித்து வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ காரணமாகப் புறநகர்ப் பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால், பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பிரதான ஏ6 அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், பாரீஸ் நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் வழித்தடங்களும் ரத்து செய்யப்பட்டதால் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பிரான்ஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாரென்ட் நுனெஜ்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏறக்குறைய 1,300 ஹெக்டேர் (3,250 ஏக்கர்) வனப்பகுதியானது முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. பாரீஸ் பிராந்திய வரலாற்றிலேயே முதல்முறையாகத் தீயை அணைக்கத் தெற்குப் பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட கனடா ஏர் ரகத் தீயணைப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சீன் நதியிலிருந்து தண்ணீரை முகந்து வந்து தீயின் மீது வீசி வருகின்றன."

மேலும், 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், நவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் காட்டுத்தீ இயற்கையாக உருவானதா அல்லது யாரேனும் சதிச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் பிரான்ஸ் தேசியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், காட்டின் வெவ்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 10 புள்ளிகளில் ஒரே நேரத்தில் தீப்பற்றிக் கொண்டது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டு வனம் மற்றும் பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிரான்ஸ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.