தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு - விதிகளை உருவாக்கச் சிறப்புக் குழு அமைப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

 
மாதவிடாய்

தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்கச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மாதவிடாய் நாட்களில் பல்வேறு உடல் மற்றும் மனரீதியான சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனினும், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கொள்கை தற்போது நடைமுறையில் இல்லை. எனவே, இதுகுறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பான கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

மாதவிடாய்

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய விளக்கங்களை அளித்தார்:

பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் 2 வார கால அவகாசம் கோரப்பட்டது.

அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாதவிடாய் கால விடுப்பு விதிகளை உருவாக்க அமைக்கப்பட உள்ள குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.