பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்? சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. கவர்னர் அர்லேக்கர் விதித்த காலக்கெடுவின்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுத்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் இந்த வாய்ப்பை வழங்கியிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் தற்போது 106 எம்.எல்.ஏ.க்களாக உள்ள நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் மொத்த பலம் 119 ஆக உயர்ந்திருக்கிறது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய்க்குத் தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தேர்வில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் எனக் கருதப்படுகிறது.

இன்று காலை சட்டசபை கூடியதும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிவார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப்பின் போது அவையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, பிரிவு வாரியாக வாக்குகள் கணக்கிடப்படும். இந்த அக்னி பரீட்சையில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற பிறகு, அந்தத் தகவல் ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும்.
