“முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பாரா?” - திமுக கேள்வி!
“தேர்தலுக்கு முன்னர் பேசியது போலவே தற்போதும் முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்” என்று விமர்சித்துள்ள திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், “அவர் எப்போது செய்தியாளர்களை நேரில் சந்திப்பார்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களின் அறம் முற்றிலும் செல்லரித்துப் போய்விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஊடகங்கள் தங்களுடைய அறத்தை அடியோடு விற்றுவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டனரா? தவெக அரசின் செயல்பாடுகளுக்கு மென்மையான வார்த்தைகளால் சாமரம் வீசும் வேலையை ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எப்படியொரு அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையோடு பேசினாரோ, அதேபோலத்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரும் முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார். வெறும் மேடைகளில் மட்டும் பேசுவதை விடுத்து, அவர் எப்போது செய்தியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போகிறார்?
தமிழகத்தில் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவர் அணிச் செயலாளருமான எழிலனின் இந்த அறிக்கை புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
