இப்படியும் மரணம் வருமா? தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!
இப்படியெல்லாம் கூட மரணம் நிகழுமா என்று இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார்கள் அஜ்மீர் மக்கள். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் சாலையோரக் கடை ஒன்றில் தாகத்திற்காகத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒரு மடக்குத் தண்ணீர் குடித்த வேகத்தில் சடலமாக மாறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். என்னதான் இருந்தாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அந்த இளைஞரின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும் என்று சொல்லப்படுகிறது. தாகம் எடுக்கிறது என்று கடைக்குச் சென்ற இடத்தில், எமன் இப்படித் தண்ணீரின் வடிவில் காத்திருப்பான் என்று அந்த அப்பாவி இளைஞன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

தற்போது அந்த இளைஞரின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்தச் சம்பவம் அஜ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாகம் தீர்க்கப் போன இடத்தில் ஒரு உயிர் தாரைவார்க்கப்பட்டது, அங்கிருந்த கடைக்காரர்களையும் மற்ற பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
