அரை இறுதிக்கு முன்னேறுமா இந்தியா? இன்று மே.இந்தியத் தீவுகள் அணியுடன் மோதல்!

 
இந்தியா கிரிக்கெட்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று (மார்ச் 1, 2026) இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டம் ஒரு 'வாழ்வா - சாவா' போராட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா.. நிதிஷ், ரிங்கு அதிரடி!

சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி எழுச்சி கண்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா கடந்த போட்டியில் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு மிகப்பெரிய பலம். அவருடன் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டக் காத்திருக்கிறார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் அதிரடி வீரர் திலக் வர்மா ஆகியோர் வலுவான ரன் குவிப்பிற்குத் தயாராக உள்ளனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் ஆல்-ரவுண்டர் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கியமானது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா கூட்டணி வேகப்பந்து வீச்சில் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்யத் தயாராக உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் களமிறங்குகிறது. பிரண்டன் கிங், ஷாய் ஹோப் மற்றும் அதிரடி மன்னன் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

டி20 கிரிக்கெட் இந்தியா

ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோரின் வேகம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது. கொல்கத்தாவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், போட்டி முழுமையாக நடைபெற வாய்ப்புள்ளது.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே ஒரு பிரிவில் அரை இறுதிக்குத் தகுதியாகிவிட்ட நிலையில், இன்று இந்தியாவின் வெற்றி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.