மெஸ்ஸி உலகக் கோப்பையில் பங்கேற்பாரா? ரசிகர்கள் அதிர்ச்சி... தசைப்பிடிப்பால் அவதி!

 
மெஸ்ஸி மெஸ்ஸி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில், பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான இண்டர் மியாமி அணியின் கடைசி லீக் போட்டியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மழையினால் ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்த அந்தப் போட்டியின் 73-ஆவது நிமிடத்தில், மெஸ்ஸி தனது இடது தொடையின் பின்பகுதியைப் பிடித்தபடி அசௌகரியமாக உணர்ந்தார். உடனடியாக அவராகவே பயிற்சியாளரிடம் கூறிவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மெஸ்ஸி கால்பந்து

போட்டிக்குப் பிறகு அவருக்கு நடத்தப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனையில், அதிக பணிச்சுமை காரணமாக அவரது இடது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் தசைச் சோர்வு ஏற்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி ரசிகர்களுக்குப் புதிய அப்டேட் ஒன்றை அளித்து ஆறுதல் படுத்தியுள்ளார்.

மெஸ்ஸி

"மெஸ்ஸியின் காயம் குறித்து ஆரம்பத்தில் பயந்தோம். ஆனால் முதல் கட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, காயம் மிகவும் தீவிரமானது அல்ல. தசை நார் கிழிசல் போன்ற பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், உலகக் கோப்பைக்கு முன்னதாக அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள ஹோண்டுராஸ் மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான பயிற்சிப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் உலகக் கோப்பைக்கு முன் முழுத் தகுதியை எட்ட மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று லியோனல் ஸ்கலோனி, அர்ஜென்டினா பயிற்சியாளர் கூறியுள்ளார்.

அர்ஜென்டினா அணி தனது முதல் உலகக் கோப்பை லீக் போட்டியில் வரும் ஜூன் 16 அன்று அல்ஜீரியா அணியை எதிர்கொள்ள உள்ளது. அதற்குள் மெஸ்ஸி 10 முதல் 14 நாட்கள் முழு ஓய்விற்குப் பிறகு, தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வந்து உலகக் கோப்பைத் தொடரை அர்ஜென்டினாவின் கேப்டனாக வழிநடத்துவார் என்றே மருத்துவ வட்டாரங்கள் மற்றும் அவரது சக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.