ரூ.2,500 மகளிர் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா? பட்ஜெட்டில் எகிறும் எதிர்பார்ப்பு!
தமிழ்நாட்டில் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் தொகைத் திட்டத்தில், புதிய விண்ணப்பங்கள் ஏற்பு மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான மறுவாய்ப்பு குறித்து வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டு மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்', இந்த ஆட்சியிலும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின்படி, இத்தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டம் தற்போது செயல்பட்டு வந்தாலும், தகுதியிருந்தும் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்கள் தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல புதிதாகத் திருமணமான தகுதியுள்ள இளம்பெண்களும் முதன்முறையாக விண்ணப்பிக்க ஆவலோடு காத்துள்ளனர்.
இருப்பினும், புதிய விண்ணப்பங்களை வாங்குவது குறித்தோ அல்லது நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வது குறித்தோ அரசிடமிருந்து இதுவரை மாவட்ட நிர்வாகங்களுக்கு எவ்வித அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் அனைவரும் சமுதாய நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, முழு மூச்சாக மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குத் தயாராக வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அண்மையில் கறாரான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கஞ்சா கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி சிக்கிய சர்ச்சை, சிலிண்டர் மானியக் குறைப்பு போன்ற விவகாரங்கள் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தவெக அரசுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
எனவே, ஏழை எளிய பெண்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய விண்ணப்பங்களை ஏற்பதற்கான பிரத்யேக அறிவிப்புகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து இந்த பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்று கோட்டை வட்டாரங்கள் மிகவும் பலமாக நம்புகின்றன.
