"ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படுமா?" - மத்திய அரசு விளக்கம்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, "பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வரும் மே 14-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும்" என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
A post is going viral on social media claiming that after PM Narendra Modi’s call to conserve fuel, petrol pumps will remain closed every Sunday in certain states.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) May 14, 2026
❌ This claim is #FAKE
🚫 NEVER share unverified messages. Stay alert and rely only on trusted… pic.twitter.com/TPEmHHSIRP
இந்நிலையில், வைரலாகும் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என மத்திய அரசும், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை கண்டறியும் குழுவும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியானது, கடந்த 2017-ம் ஆண்டு இந்தியப் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (Consortium of Indian Petroleum Dealers) வெளியிட்ட ஒரு பழைய ஆலோசனைக் கூட்டத்தின் செய்தியாகும். அப்போது விவாதிக்கப்பட்ட அந்தப் பரிந்துரை, பின்னர் எண்ணெய் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்தப் பழைய செய்தியைப் புதிய செய்தி போலச் சமூக விரோதிகள் சிலர் வதந்தியாகப் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று பரவும் தகவல் முற்றிலும் போலியானது. மத்திய அரசோ அல்லது பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கங்களோ இதுபோன்ற எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட அனைத்து முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழக்கம் போல் தடையின்றி இயங்கும்.

பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் இத்தகைய வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் என்றும், இது போன்ற ஆதாரமற்ற செய்திகளைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தனித்தனியாகச் செல்லாமல் குழுவாக இணைந்து பயணிக்கலாம் என்றும், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் என்றும் மட்டுமே பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். எனவே, எரிபொருள் சேமிப்பு என்பது பொதுமக்களின் சுய விருப்பத்தைச் சார்ந்தது தானே தவிர, பெட்ரோல் பங்க்குகளை மூடுவதற்கான உத்தரவு அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
