மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - ரவ்நீத் சிங் பிட்டுவின் அமைச்சர் பதவி நீடிக்குமா?!
மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சராக இருக்கும் ரவ்நீத் சிங் பிட்டுவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75(5)-இன் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒரு நபர் கூட அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மத்திய அமைச்சராகப் பதவி வகிக்க முடியும். ஆனால், அந்த 6 மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஜூன் 21-டன் பதவிக்காலம் முடிந்த மற்றொரு இணை அமைச்சரான ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவைப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால், ரவ்நீத் சிங் பிட்டுவின் விஷயத்தில் அத்தகைய எந்தவொரு ராஜினாமா கடிதமும் கோரப்படவில்லை. எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு அவர் எம்பியாக இல்லாமலேயே அமைச்சராகத் தொடரச் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபில் முக்கிய ஜாட் சீக்கிய தலைவராக இருக்கும் ரவ்நீத் சிங் பிட்டுவை தற்போதைய சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கினால், அது பஞ்சாப் தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பாஜக தலைமை கருதுகிறது.
இது குறித்துப் பேசியுள்ள ரவ்நீத் சிங் பிட்டு, "நான் கடந்த 17 ஆண்டுகளாக எம்பியாக நாடாளுமன்ற அரசியலில் இருந்துவிட்டேன். எனது பைகளைத் தயார் செய்துவிட்டேன். இனி பஞ்சாப் மாநில அரசியலில் தீவிரமாகப் கவனம் செலுத்தி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பஞ்சாப் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக அவர் தற்காலிகமாகப் பதவியில் நீட்டிக்கப்படலாம் அல்லது மாநில அரசியலுக்கு அனுப்பப்பட்டு அவருக்குப் பதிலாகப் பஞ்சாபைச் சேர்ந்த வேறொரு முக்கிய முகத்திற்கு வாய்ப்பளிக்கப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
